உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
'நம் தாய்நாடு வளம்பெற அடிப்படை விவசாயம், அடுத்தது தொழில் என்கிறார் மகாகவி பாரதி.
நம் பாரத நாட்டில் இயற்கை வளங்களும், நல்ல மனம் படைத்த மனித வளமும் நிறைந்திருக்கிறது என மனப்பூர்வமாக நம்பும் ஸ்வயம்சேவகன் நான்.
கடந்த அறுபதாண்டுகளாக நாம் இயற்கையை சரிவர சமன்படுத்தாததால் இறைவன் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்மைக் கடுமையாக தண்டிக்கிறான். கடந்த 4 ஆண்டுகளில் நெல்லுக்கும், கரும்புக்கும் மாற்றாக, நீர்வளம் அதிகம் தேவைப்படாத சோளம், கம்பு, வரகு, சூரியகாந்தி போன்றவற்றை விதைக்கும்படி விவசாயிகளை வழிநடத்தத் தவறிவிட்டோம். ஆகையால் விவசாயத்தையும், அதற்கு மதிப்பைக் கூட்டும் கால்நடைகளையும் வளர்ப்பது மட்டுமே நம் தேசத்தின் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரே வழியாகும்.
நாம் அரிசியை உண்கின்றோம். கால்நடைகளும், கோழிகளும் தவிட்டை உண்கின்றன. நாம் எண்ணெய்களை உட்கொள்கிறோம். அவை புண்ணாக்கை உண்கின்றன. உலகம் முழுக்க விவசாயம் மதிப்பு சார்ந்த தொழில்களால் (கால்நடை தொழில்) மட்டுமே உயர்ந்துள்ளது. தற்போது குஜராத்திலும், கர்நாடகாவிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் சங்கங்களைப் போல காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பல கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதே போல் விற்பனையிலும், விலையை முன்கூட்டியே ஊகித்து வியாபாரம் செய்வது ஆபத்தானது. அது விற்பவர் வாங்குபவர் இருவருக்குமே நீண்டகாலப் பயனைத் தராது.
நிலையான, சாத்தியமான லாபத்தைக் கணக்கிட்டு விலை நிர்ணயித்தால், அது இருவருக்குமே நீண்டகாலப் பலனைத் தரும்.
நம் தாய்நாட்டில் ஏறத்தாழ 7 லட்சம் கிராமங்கள் உள்ளன. அவற்றில் பயிராகும் பொருட்களை நுகர்வோர் 60-70 சதவிகிதத்தினர் 100 முக்கிய நகரங்களில் வசிக்கின்றனர்.
ஆகவே, அந்தந்த கிராமத்திற்கு அருகிலிருக்கும் நகரத்தில் விவசாயியே நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும் 'உழவர் சந்தைகளை” உடனடியாக ஏற்படுத்துவதே தீர்வாகும். தமிழகத்தில் வெற்றிகரமாக முயற்சி செய்யப்பட்ட உழவர்சந்தைத் திட்டத்தை இந்தியா முழுக்க அமல்படுத்த வேண்டும்.
போக்குவரத்து நம் தாய்நாட்டின் முதுகெலும்பாகும். "Ethanol" என்ற வார்த்தையை நாங்களும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இன்று வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை.
சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும், அனுபவம் வாய்ந்த எண்ணெய்க் கொள்கையே உடனடித் தேவை. (Petrol, Deesel Pricing Policy).
ஆகவே உடனடியாக அரசாங்கத்தின் முழு கவனமும் விவசாயம், விவசாயம் சார்ந்த துறைகள், விவசாயப் பொருட்களை நல்ல நியாயமான முறையில் விற்பனை செய்தல், போக்குவரத்து ஆகியவற்றின் தரத்தை உயர்த்த மட்டுமே இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்.
-மகாகவி பாரதியார்